சென்னை;
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி,ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார். தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் ஏராளமான பெண் பயனாளிகளுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, கண் கண்ணாடி, தையல் இயந்திரங்களை வழங்கினார்.
பின்னர் நீதிபதி பேசியதாவது:
விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை, பெண் குழந்தைகள் கல்விக்காகவும், ஏழை மகளிர் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஆண்டுதோறும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது.
இந்த அறக்கட்டளைபோல நாமும் ஏழை பெண்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்காக முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணன் வடிவமைத்த சிற்பம் ஜி-20 மாநாட்டுக்கே பெருமையை தேடித்தந்தது.
அதனாலேயே பத்மஸ்ரீ விருதும் அவரை தேடிவந்தது. நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் நாம் போற்றிப் பாது காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி-20 மாநாட்டில் சிலை: ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “ஜி-20 மாநாட்டில் 40 அடி உயரத்தில் சிலை வைக்க வேண்டும்.
அதை பாரம்பரிய ஸ்தபதி ஒருவர்தான் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். நான் சிற்ப சாஸ்திர முறைப்படி, பாரதம், பாரதப் பிரதமர் என்ற சொற்களுடன், 27 அடி உயர நடராஜர் சிலையை அமைக்கப் பரிந்துரைத்தேன்.
அதை பிரதமர் ஏற்றுக் கொண்டார். அவர், கலைஞர்களின் தொழில் உரிமையை, பாரம்பரிய நடைமுறைகளை மதிப்பவர்” என்றார்.
அறக்கட்டளை நிறுவனர் கே.பி.வித்யாதரன் பேசும்போது, “முன்பு நல்ல நாள் பார்த்து, தோப்புக்குச் சென்று, ஆண் மரமா, பெண் மரமா என்று தேர்வு செய்து, வீடுகளுக்கு மரங்களை அறுப்பார்கள்.
அதனால்தான் அந்தக் காலத்து வீடுகளும், கோயில் கதவுகளும் நீண்டகாலம் உறுதியாக இருந்தன.
அந்த வீடுகளில் வசிப்போரும் பல தலைமுறைகள் சிறப்பாக வாழ்ந்தனர். இன்று பட்டறையில் கிடைத்த மரங்களையும், ரெடிமேடு கதவுகளையும் பயன்படுத்துகின்றனர். திருமணத்துக்கு தாலியை ரெடிமேடாக வாங்கி அணிந்து கொள்கின்றனர்.
அந்தக் காலத்தில் நல்ல நாள், நேரம் பார்த்து, தங்கத்தை உருக்கி தாலி செய்ததால், அதை வாங்குவோரின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருந்தது.
எனவே, நமது பாரம்பரிய மரபுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் தெய்வநாயகி ராதாகிருஷ்ணன், விஜய லட்சுமி வித்யாதரன், டாக்டர் வி.விஜயசந்தர் வித்யாதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.