லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரரான பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலி 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஆலி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அதேவேளை, கேப்டன் பென் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 39 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா தரப்பில் நிதிஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2ம் நாள் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிதிஷ் குமார் ரெட்டி தனது பந்துவீச்சு குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை முடித்து விட்டு வந்த பொழுது எனது பந்து வீச்சை நிலைத்தன்மை கொண்டதாக வைப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன்.
நான் அப்பொழுது கம்மின்ஸ் இடம் சில குறிப்புகள் கேட்டேன். ஆஸ்திரேலியாவில் எந்த முறையில் பந்து வீசினால் சிறப்பாக இருக்கும் என அவர் எனக்கு கூறினார்.
மேலும், நான் ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்தில் பந்து வீசுவது எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பது குறித்தும் அவரிடம் கேட்டு வருகிறேன்.
அவர் அதற்கு பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது ஆனால் வானிலையை பார்த்து நிலைத்தன்மையுடன் பந்து வீசுமாறு என்னிடம் கூறியிருந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது மோரனே மோர்கல் உடன் இணைந்து வேலை செய்வதும் சிறப்பானது என்று நான் சொல்லுவேன். அவர் என்னுடன் இரண்டு வாரங்களாக வேலை செய்து வருகிறார்.
இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நான் அவருடன் வேலை செய்வதை மிகவும் ரசிக்கிறேன்.
எனக்கு பந்தின் இருபுறமும் ஸ்விங் கிடைக்கிறது. எனவே நான் பந்தை ஒரே இடத்தில் வீசுவதற்கு நிலைத்தன்மையில் தொடர்ந்து உழைத்து வருகிறேன்.
இரண்டு வருடங்களாக இதற்காக நான் நிறைய முயற்சி செய்து உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.