தன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா என்னிடம் சொன்னார் – வியான் முல்டர்

கேப்டவுன்,
அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனும், ஆல்- ரவுண்டருமான வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவர் 367 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனால் அவர் மீண்டும் களமிறங்கி 400 ரன்களை தொடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குள் தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவரான வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் (400 ரன்கள்) உலக சாதனையை உடைக்க அருமையான வாய்ப்பு கனிந்த போதிலும், அதற்குள் டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்தினார்.

இது குறித்து வியான் முல்டர் விளக்கமும் அளித்திருந்தார். அதில், ‘அணியின் நலன் கருதியே டிக்ளேர் செய்தோம்.

2-வதாக, பிரையன் லாரா உண்மையிலேயே ஒரு ஜாம்பவான். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 400 ரன்கள் குவித்தார். அந்த சிறப்பு வாய்ந்த சாதனை அவரிடம் தொடர்ந்து இருக்கட்டும்.

மீண்டும் ஒரு முறை இதே போன்று வாய்ப்பு கிடைத்தாலும் அனேகமாக இதைத்தான் செய்வேன்’ என்று கூறினார்.

இந்நிலையில், வியான் முல்டர் உடன் லாரா பேசியுள்ளார். அந்த உரையாடல் என்ன என்பது குறித்து முல்டர் இப்போது பகிர்ந்துள்ளார். “நான் லாரா உடன் பேசி இருந்தேன்.

நான் என்னுடைய லெகசியை உருவாக்குகின்ற காரணத்தால் 400 ரன்னை நோக்கி ஆடியிருக்க வேண்டும் என சொன்னனார். சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை என்றும் சொன்னார்.

அடுத்த முறை நான் அந்த நிலையில் இருந்தால் நிச்சயம் அதை எட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என சொன்னார். அது அவரது பார்வையில் இருந்து சுவாரஸ்யமானது.

ஆனால், நான் சரியானதைத்தான் செய்தேன் என நம்புகிறேன். நான் நேசிக்கும் விளையாட்டுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *