லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் நிதிஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
முன்னதாக முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 98 ரன்களில் நின்ற ஜோ ரூட் அடித்த பந்து ஜடேஜாவை நோக்கி செல்லும். அந்த பந்தை ஜடேஜா பிடிப்பதற்குள் ஜோ ரூட் சிங்கிள் ரன் ஓடி சேர்த்திருவார். ஆனால் அந்த பந்தை பிடித்த ஜடேஜா, ஜோ ரூட்டை பார்த்து 2 ரன்கள் ஓடி சதத்தை நிறைவு செய்ய சொல்லி சைகை காட்டுவார். அத்துடன் பிடித்த பந்தை தரையில் போட்டும் 2 ரன்கள் ஓடுமாறு வேடிக்கை காட்டுவார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.