முடி வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் – கற்றாழை!!

பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?


நெல்லிக்காய்
இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம்.

நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

கற்றாழை
இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது.

கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

எதனை பயன்படுத்தலாம்?
நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *