சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது.
இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், முதல்-அமைச்சர் அங்கு தங்கியுள்ளார். இதற்கிடையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 15-ந் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலந்து கொண்ட மக்களிடம் குறைகளை கேட்டும், அவர்களுக்கு தீர்வு கிடைத்தது குறித்தும் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது பயணாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.