பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் 7-வது நாளாக போராட்டம் : ராயபுரம், திரு.வி.க. நகரில் குப்பை தேக்கம்!!

சென்னை:
பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மைப் பணியாளர் தரப்புடன் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில், 7-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது.

மேற்கூறிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளையும் தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, பணி பாதுகாப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது. தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆக.1-ம் தேதி முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், ‘தூய்மைப் பணியில் தனியாரை அனுமதிக்க கூடாது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, பணி புறக்கணிப்பும் செய்து வருகின்றனர்.

இதனால் ராயபுரம், மேயர் ஆர்.பிரியாவின் வார்டு இடம்பெற்றுள்ள திரு.வி.க.நகர் மண்டலம் ஆகியவற்றில் 6 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால், சாலைகளில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகளை அழைத்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ‘அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்’ என்று அமைச்சர் நேரு கூறியதாக உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, எங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *