சென்னை:
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆக.14) வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையானது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’.
வெளிமாநிலங்களில் காலை 6 மணிக்கே படம் ரிலீஸ் ஆனதால் தீவிர ரஜினி ரசிகர்கள் இன்று முதல் ஷோ பார்க்க ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் குவிந்தனர். ‘கூலி’ முதல் காட்சியைப் பார்த்த நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வருகிறது.
இதற்கிடையில், ‘கூலி’ படக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.
அது தொடர்பான புகைப்பத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், “தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ‘கூலி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.