சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ என்ற சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் யோ-யோ சோதனையுடன் பிரான்கோ என்ற மேலும் ஒரு சோதனையை புதிய அளவுகோலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிரான்கோ சோதனை ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ யோ சோதனையைவிட கடினமானது. இந்த சோதனையில் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என்ற 3 கட்டங்கள் உள்ளன. ஒரு தொகுப்பில் 3 தூரங்களிலும் ஓட வேண்டும்.
இதில் வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும். அந்த 5 கட்டங்களையும் வீரர்கள் 6 நிமிடத்திற்குள் முடித்தால் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார்கள்.
சமீபத்திய இங்கிலாந்து தொடரில் முகமது சிராஜை தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் இந்த புதிய சோதனை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.