புதுடெல்லி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன.
இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்று கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது:
பாகிஸ்தான் உடனான விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகுமுறை, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கொள்கையை பிரதிபலிக்கிறது.
பாகிஸ்தான் உடனான இருதரப்பு தொடர்களை இந்திய அணி புறக்கணிக்கும். இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம்.
ஆனால் ஆசிய கோப்பையில் விளையாடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஏனெனில் அது பன்முக நிகழ்வாகும். இருதரப்பு போட்டிகளுக்கு பாகிஸ்தானை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஐ.சி.சி. தொடராகவே இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என தெரிவித்தது.