சென்னை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாடு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார். தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது.
வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.
தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள்.
மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.