”ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு”!!

சென்னை:
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, தொழில் துறை தலைவர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவரை வட ரைன் – வெஸ்ட் பாலியா மாகாண அதிகாரி அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரக பொறுப்பாளர் அபிஷேக் துபே, ஃபிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பு துணைத் தூதர் விபா காந்த் ஷர்மா மற்றும் ஏராளமான தமிழர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பின்னர், மாபெரும் அயலக தமிழர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற முதல்வர், ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கவுரவித்தார். டசல்டார்ஃபில் இன்று நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டுக்கு தலைமை ஏற்கும் முதல்வர் ஸ்டாலின், உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்யவும், தங்கள் தொழில் திட்டங்களை விரிவுபடுத்தவும் விரும்பும் முக்கிய முதலீட்டாளர்களை தனியாகவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பயணத்தின்போது, ஜெர்மனியின் வட ரைன் – வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு செல்லும் முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்திக்க உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *