வேளாங்கண்ணி மாதா பல்வேறு அதிசயங்களை நிகழ்த்திய சம்பவங்கள் உள்ளன. அவற்றில் 3 அதிசயங்கள் முக்கியமானவை. அவை பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா காட்சி அளித்தது. மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம், புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகியவை ஆகும்.
இவற்றில் மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்தது, புயலில் சிக்கிய மாலுமிகளின் கப்பலை பத்திரமாக கரை சேர்த்தது ஆகிய 2 அதிசயங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மாற்றுத்திறனாளி சிறுவனை நடக்க வைத்த அதிசயம்
பால் விற்ற சிறுவனுக்கு வேளாங்கண்ணி மாதா அளித்த காட்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு வேளாங்கண்ணி அன்னையின் 2-வது காட்சி வேளாங்கண்ணி சிற்றூரிலேயே அமைந்துள்ள “நடுத்திட்டு” என்ற இடத்தில் நடைபெற்றது. அங்கே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன், மோர் வியாபாரம் செய்து வந்தான். ஒரு நாள் மீண்டும் எழில்மிகு தோற்றத்துடன் வேளாங்கண்ணி அன்னை தனது குழந்தை இயேசுவுடன் காட்சி தந்து, தனது குழந்தைக்கு சிறிதளவு மோர் தருமாறு கேட்டார்.
தாயின் பேரழகையும், குழந்தையின் தெய்வீக முகத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்த சிறுவன், குழந்தைக்கு மகிழ்வுடன் மோர் வழங்கினான்.
அப்போது அந்த பேரழகு பெட்டக தாய், அந்த சிறுவனிடம் பின்வருமாறு சொன்னார். “மகனே உடனே நாகப்பட்டினம் சென்று அங்கே வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஒருவரிடம் நீ கண்ட இந்த காட்சியினை கூறி இந்த இடத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து கடவுளை வழிபட ஒரு ஆலயம் கட்ட சொல்வாயாக” என்றார். ஆனால் அந்த சிறுவனோ தான் நடக்க முடியாதவன். என்னால் எப்படி அம்மா போக முடியும் என்ற ஏக்க பார்வையோடு வேளாங்கண்ணி அன்னையை பார்க்கிறான்.
அவனின் ஏக்கத்தை புரிந்து கொண்ட வேளாங்கண்ணி அன்னை “மகனே எழுந்து நட” என்ற வார்த்தைகளை உதிர்க்கிறார். அந்த சிறுவனின் கால்களிலே ஒரு புது ரத்தம் பாய்வது போல் தோன்றியது. அந்த சிறுவனும் உடனே எழுந்தான், நடந்தான், ஓடினான். அந்த சிறுவனின் ஓட்டம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் வீடு வரை தொடர்ந்தது. வீட்டிற்கு சென்று நடந்ததை சொன்னான்.
அவனின் வார்த்தைகளை கேட்டு ஆச்சரியம் அடைந்தார் அந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அதற்கு முந்தைய இரவில் அந்த கத்தோலிக்க கிறிஸ்தவரின் கனவில் தூய அன்னை தோன்றி ஆலயம் கட்ட சொன்னதை நினைவு கூர்ந்தார்.
உடனே அந்த சிறுவனுடன் வேளாங்கண்ணி அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்திற்கு வந்தவுடன், தெய்வீக தாயின் குரலும் கேட்டது. மகனே இந்த இடத்திலேயே ஆலயம் கட்ட வழி செய்வாயாக. இதை கேட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அன்னைக்கு ஒரு ஆலயம் கட்டி முடித்தார்.
அதுவே இன்று நாம் காணும் வேளாங்கண்ணி அன்னை வீற்றிருக்கும் பேராலயம்.
புயலில் சிக்கிய கப்பலை பத்திரமாக கரை சேர்த்தாள் அன்னைகி.பி. 17-ம் நூற்றாண்டிலே வேளாங்கண்ணி அன்னையின் 3-வது புதுமை நிகழ்ந்தது. அப்போது சீனாவில் உள்ள மாக்காவில் இருந்து போர்த்துக்கீசிய வியாபார பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்தது.
வழியில் கடுமையான புயலில் அந்த கப்பல் சிக்கியது. அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் பயந்து, நடுங்கினார்கள்.
புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கப்பல் மூழ்கும் நிலை நெருங்கியது. அந்த நிலையில் மாலுமிகள் அனைவரும் கன்னி மரியாவிடம் கரம் குவித்து கண்ணீரோடு ஜெபித்தார்கள்.
நாங்கள் நலமுடன் கரை சேரும் இடத்தில், கன்னி மரியே உமக்கொரு ஆலயம் எழுப்புகிறோம் என வேண்டினர். சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புயலின் ஆக்ரோஷம் குறைய தொடங்கியது.
அவர்கள் கப்பலும் ஓரிடத்தில் கரை சேர்ந்தது. அன்றைய தேதி செப்டம்பர் 8. அது கன்னி மரியாவின் பிறந்த நாள். கப்பல் கரை சேர்ந்த இடம் வேளாங்கண்ணி கடற்கரை.
மாலுமிகள் தாங்கள் நலமுடன் கரை வந்து சேர்ந்ததற்காக கன்னி மரியாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி செலுத்தி, நன்றி காணிக்கையாக அன்னைக்கு சிறிய ஆலயம் ஒன்று எழுப்பினார்கள்.
போர்த்துக்கீசிய மாலுமிகள் எப்போதெல்லாம் வேளாங்கண்ணி கடற்கரை வழியாக செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அங்கு வந்து அன்னையை வணங்கி செல்வது வழக்கம்.
அப்படி வரும் போது ஒருமுறை தாம் கட்டிய ஆலயத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, தாங்கள் கொண்டு வந்த பீங்கான் ஓடுகளை வேளாங்கண்ணி அன்னை ஆலயப்பீடத்தில் பதித்து, ஆலயத்தை அழகுபடுத்தினார்கள்.
அந்த பீங்கான் ஓடுகளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்ைக நிகழ்வுகள் அழகான முறையில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளன.
அவை வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தை அலங்கரிக்கும் அழியா ஓவியங்களாக, இறவா காவியங்களாக வேளாங்கண்ணி அன்னை திருத்தலப்பீடத்தில் இன்றும் காணப்படுகிறது.
இந்த ஆலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தின் வடிவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. அன்னை ஆரோக்கிய மாதா நிகழ்த்தி காட்டிய அதிசயங்களால் வேளாங்கண்ணி ஆலயம் உலகம் போற்றும் பேராலயமாக விளங்குகிறது.