ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர் கோயில் மகிமை!!

தங்கம்போல் புடம்போட்டு தன் பக்தர்களை ஜொலிக்கச் செய்யும் பரமன், அந்த பக்தர்களின் பக்தியை பார்போற்றும்படி செய்திடுவான். அதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி, ஆட்கொள்வான். அப்படி பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எண்ணற்ற அடியவர்களுள் ஒருவரே மானக்கஞ்சாறர்.

மானமேப் பெரிதென வாழ்ந்த வேளாளர்க்குடியில் பிறந்த இவர், சோழ மன்னனின் படைகளுக்கு தலைமை வகிக்கும் படைத்தளபதியாக விளங்கினார். ”மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்” என்று சுந்தரர் தனது திருத்தொண்டத்தொகையில் இவரது பெருமையையும், வலிமையையும் புகழ்ந்து போற்றுகின்றார். சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்த மானக்கஞ்சாறர் தனது வீரத்தாலும், உழைப்பினாலும் செல்வங்கள் யாவையும் பெற்றார். இருப்பினும், இவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. பல நாட்கள் குழந்தைப்பேறு இன்றி வருந்திய இவருக்கு ஈசன் அருளால் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்.

அவளுக்கு ‘புண்ணியவர்த்தினி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த புண்ணியவர்த்தினி பருவமெய்தி, திருமண வயதை அடைந்தாள். பேரழகுடைய இவளுக்கு ஏயர்கோன் கலிக்காமரை மணம் முடித்திட, பெரியவர்கள் நிச்சயித்தனர்.

திருமண நாளும் வந்தது. சுற்றமும், நட்பும் சூழ்ந்தனர். தன் பக்தன் மானக்கஞ்சாறன் மீது தீராக்காதல் கொண்ட மகாதேவர், ருத்ராட்ச மாலையோடு, எலும்பு மாலைகளையும் அணிந்து கொண்டு, கேசத்தையே பூணூலாக தரித்துக் கொண்டு, உடல் முழுதும் விபூதி பூசிய வண்ணம் மகாவிரதம் பூண்ட மாவிரதராய் (அகோரியாக) மணப்பந்தலை வந்தடைந்தார்.

அவரைக் கண்ட மானக்கஞ்சாறர் மனம் பூரிப்படைந்து, அவ்வடியாரை வரவேற்று மகிழ்ந்தார். தனது மகள் புண்ணியவர்த்தினியை அழைத்தார். சிவனடியாரின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசி பெற பணித்தார். அவளும் அந்த அடியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது அழகிய நீண்ட கருங்கூந்தலை கண்ணுற்றார் அகோரியாய் வந்த அர்த்தநாரீசர்.

”ஆஹா, இந்த நீண்டக் கூந்தல் எனது மார்பில் அணியும் பஞ்சவடிக்கு (கேசத்தால் அணியும் பூணூல்) உதவுமே” என்று மானக்கஞ்சாறரிடம் கூறினார். திருமண வேளையில், அதுவும் மகளின் கூந்தலை வெட்டுவது அமங்கலம் என்று கூட கருத்தில் கொள்ளாத மானக்கஞ்சாறர், உடன் தனது வாளை எடுத்தார். தன் மகளின் கூந்தலை அறுத்தார். வந்திருந்த மாவிரதரிடம் அளித்தார். அதை வாங்கிட எழுந்த அவ்வடியார் மறைந்தார்.

மறுகணமே தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்து, கஞ்சாறரை ஆட்கொண்டு, அவரை கண்ணீர்மல்கச் செய்தார் கயிலைநாதர். ”உனது அன்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே தாம் இவ்வாறு செய்தோம்” என்று கூறி அவரை ஆனந்தத்தில் திளைக்கச் செய்தார். அறுபட்ட புண்ணியவர்த்தினியின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது. ஈசனுக்கே தனது கேசத்தை அளித்து, பெரும் புண்ணியம் செய்த புண்ணியவர்த்தினி ஏயர்கோன் கலிக்காமரை மணந்தாள். இரு வரும் சிவத்தில் திளைத்து வாழ்ந்தனர். இறுதியில் இணையில்லா ஈசனடியைச் சேர்ந்தனர்.

ஆதியில் சப்தமாதர்களுள் அன்னை கவுமாரி வழிபட்ட இப்பதி பாரிஜாத வனமாக திகழ்ந்துள்ளது. இந்த பாரிஜாத வனத்தில் ஆசிரமம் அமைத்து, தவமியற்றி வந்த பரத்வாஜ முனிவரின் வேண்டு கோளுக்கு இணங்க பெருமான் இங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளியுள்ளார். இதனால் இப்பதி ”பரத்வாஜாசிரமம்” என்று அழைக்கப்பட்டது. இத்தல நாயகர் பரத்வாஜீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் இத்தலம் கஞ்சாறூர் என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த முனிவரை ஆட்கொண்ட பின்னர் ஆனந்த தாண்டவபுரம் என்றாகி, தற்போது ஆனதாண்டவபுரம் என்று மருவியுள்ளது.

ஆனந்த மாமுனிவர் அனுதினமும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இரவு அர்த்தஜாம பூஜைக்கு சிதம்பரம் சென்று தில்லையம்பல வாணரை தரிசிப்பது வழக்கம். தினமும் சரியாக நடந்துவந்த இந்த வழக்கம் ஏனோ தில்லைக்கே உரிய திருநாளான ஆருத்ரா அன்று முரண்பாடானது. அன்றைய தினம் ராமேஸ்வர ஸ்நானம் முடித்து, கஞ்சாறூர் நெருங்கும் வேளையில் புயல் காற்றோடு, கடும் மழையும் பெய்தது. செய்வதறியாமல் திகைத்த ஆனந்த முனிவர் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். அடியார் துயரம் காணப் பொறுக்காத அம்பலத்தரசர் தனது ஆனந்தத் திருநடனத்தை இத்தலத்தில் ஆனந்தமாய் அரங்கேற்றினார். பேரானந்த பெருவெள்ளத்தில் மூழ்கினார் அனந்த மாமுனிவர். இதனால் இத்தலம் அன்று முதல் ஆனந்தத் தாண்டவபுரம் என்றே அழைக்கலானது.

ஆனந்த மாமுனிவருக்கு ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டியருளியதால் சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்ய முடியாதவர்கள் இந்த ஆனந்த தாண்டவபுரத்திலேயே அந்த அருட்காட்சியை கண்டு மகிழலாம். அதோடு சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் செய்வதற்கு முன்னரோ அல்லது தரிசனம் செய்த பின்னரோ கூட இங்கு நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது உன்னதமான சிவனடியார்களின் மரபாக உள்ளது.

மற்ற தலங்களைவிட இங்கு உள்ள நடராஜரின் இடது திருவடி சற்று முன்னே நீண்டு காணப்படுகின்றது. இந்த தூக்கிய திருவடியே ‘குஞ்சிதபாதம்’ என்று போற்றப்படுகின்றது. திருவாசியின் துணையின்றி முயலகன் மீது மட்டுமே தனது வலது காலை ஊன்றி நிற்பது முற்றிலும் வித்தியாசமான அமைப்பாகும்.

உற்சவர் சிலைகளில் விசேஷ மூர்த்தியாகத் திகழும் ஸ்ரீ ஜடாநாதர், அறிந்தக் கூந்தலை தனது இடது கையில் பிடித்தபடி காட்சி தரும் தரிசனத்தை வேறு எங்கும் நாம் காண முடியாது. அருகே மானக்கஞ்சாறரது விக்ரஹமும் உள்ளது. பின் தென் முகம் பார்த்தபடி அன்னை பிரஹன்நாயகி தனியே சன்னதி கொண்டிருக்கிறாள். அம்பிகையை வணங்கி ஈசன் சன்னிதியை அடையலாம்.

கருவறையுள் சிறிய மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார், ஸ்ரீபஞ்சவடீஸ்வரர். ஆலய வாமபாகத்தில் இன்னொரு தல நாயகியாம் அன்னை ஸ்ரீகல்யாணசுந்தரி கிழக்கே முகம் காட்டி, தனியே சன்னிதி கொண்டிருக்கிறாள். தென்மேற்கில் தான்தோன்றி கணபதியும், மேற்கில் வள்ளி – தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியரும் வீற்றுள்ளனர்.

தினசரி நான்கு கால பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். தலவிருட்சமாக பாரிஜாதம் திகழ்கின்றது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு ஆருத்ரா மற்றும் மானக்கஞ்சாறர் குருபூஜை ஆகியன இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சுவாமியும், அம்பிகையும் இங்கு திருமணக்கோலத்தில் உள்ளதால் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.

இங்குள்ள அமிர்த பிந்து தீர்த்தத்தில் நீராடி, இறை வன் – இறைவியை வழிபடுபவர்களுக்கு எல்லா விதமான தோல் நோய்களும் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முற்பிறவியில் ஏற்பட்ட சாப-பாப-தோஷங்கள் யாவும் இத்தலத்தை வழிபட்டால் போக்கிக் கொள்ளலாம்.

மயிலாடுதுறை – சேத்தூர் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனந்ததாண்டவபுரம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *