திருச்சி:
அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திரையுலகில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு பெரும்பான்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விஜயை பார்க்க துடிப்பதை திருச்சியில் காண முடிந்தது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த தாக்கம் திமுக கூட்டணியை பாதிக்காது. தேர்தல் களத்தில் விஜய் கூறுவது போன்ற நிலை அமையாது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது. திமுக கூட்டணியில் சிறு நெருடல்கூட ஏற்படாது.
அதிமுகவை விமர்சனம் செய்ய விஜய்க்கு மனதில்லை. அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை மட்டுமல்ல, அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றி வருவதுடன், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்கவும் ஓய்வெடுக்காமல் முதல்வர் உழைத்து வருகிறார்.
இசை மேதைகளுக்கு இதுவரை செய்யப்படாத மரியாதையை இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் செய்துள்ளார். தமிழனுக்கு மிகப்பெரிய மரியாதை செய்துள்ளார்.
தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழ் கலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
ஆனால், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இருந்து வருகிறது. கீழடி ஆய்வை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
உலகின் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் தான், திராவிட நாகரிகம் தான் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.