சென்னை:
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார், தென் ஆற்காடு மாவட்டம், கடலூரில் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் சிவசிதம்பரம் படையாட்சி – ரெத்தினம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் வரை கல்வி பயின்றார்.
ராமசாமி படையாட்சியார், 1950ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
இளம் வயதிலேயே சமுதாயப் பணியில் நாட்டம் கொண்டதன் விளைவாக, தமது 24-வது வயதில் கடலூர் நகராட்சியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் நகராட்சித் தலைவராகவும் தேர்வு பெற்றார். மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இவர் குடிநீர் திட்டம் கொண்டு வந்தார்.
தமது 60 ஆண்டு பொதுவாழ்வில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை மேலவை உறுப்பினர், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் மக்கள் பணியாற்றினார்.
ராமசாமி படையாட்சியாரின் வேண்டுகோளின் பேரில் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, முதலாம் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு என்ற அமைப்பை ஏ.என். சட்டநாதன் என்பவரைத் தலைவராக கொண்டு அமைத்தது.
குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீடுகள், உயர்த்தி வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ராமசாமி படையாட்சியார் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், சென்னை மாநகரின் நுழைவாயிலான கிண்டியில் ராமசாமி படையாட்சியாரின் கம்பீரச் சிலையை நிறுவி 21.2.2001 அன்று திறந்து வைத்தார்.
மேலும், அவரது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டில் விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.