துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “இது ஒரு இறுதிப்போட்டி போல உணர்வை கொடுத்தது. 2-வது இன்னிங்சின் முதல் பாதிக்கு பின் எங்களுடைய வீரர்கள் நிறையப் போராட்டத்தைக் காண்பித்தனர். நான் வீரர்களிடம் நல்ல ஆற்றலை வைத்திருக்கச் சொன்னேன், பிறகு இறுதியில் நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்போம் என்றேன்.
நன்றாக பெற்ற தொடக்கத்தை திலக், சஞ்சு ஆகியோர் அப்படியே எடுத்து சென்றது நன்றாக இருந்தது. குறிப்பாக ஓப்பனிங்கில் விளையாடாத சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடும் வேலையை பொறுப்புடன் எடுத்துக் கொண்டார். திலக் வர்மாவும் சிறந்த போராட்டத்தைக் காண்பித்ததை பார்த்தது நன்றாக இருந்தது.
அவர் (அர்ஷ்தீப்) கடந்த 2-3 ஆண்டுகளாக எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் அவரது திட்டங்களை நம்பி, அதை செயல்படுத்த முயற்சிக்கச் சொன்னேன்.
அவர் இதுபோன்ற சூழ்நிலைகளில் பலமுறை இருந்திருக்கிறார், இந்தியாவுக்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.
அவரது நம்பிக்கை அதை உறுதிப்படுத்துகிறது. சூப்பர் ஓவர் வீசுவதற்கு அர்ஷ்தீப்பைத் தவிர வேறு யாரும் இல்லை. இறுதிப் போட்டியில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.