விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் விரைவான வளர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசு மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டில் தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா ஆகிய 2 புதிய முக்கிய திட்டங்களை கொண்டு வந்து உள்ளது.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன வேளாண்மை திட்டங்களை பிரதமர் மோடி இன்று டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், ஆத்ம நிர்பார்தா திட்டம் ரூ. 11,440 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு பயிர் பல்வகைப் படுத்துதல் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.
பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்டகால குறுகிய கால கடனை எளி தாக்குதல் உள்ளிட்டவைகள் இந்த புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி விவசாய துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்து தல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.