கன்னியாகுமரி
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இங்கு குகன் என்ற முருகப்பெருமான், சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.
அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது.
அதன்பிறகு அந்த சங்குகளில் உள்ள புனித நீரால் குகநாதீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.