புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி செய்து வரும் தலீபான் அரசில் வெளியுறவு மந்திரியாக உள்ள அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.
டெல்லியில் முத்தகி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியபோது , பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பில் பேசிய முத்தகி, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை.
அதனால், அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, நாங்கள் யாரிடமும் மோதல் போக்கை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதி காணப்படுகிறது.
பாகிஸ்தான் மட்டுமே எங்களுடைய நட்பு நாடு கிடையாது. எங்களுக்கு வேறு 5 அண்டை நாடுகளும் உள்ளன. அனைவரும் எங்களுடன் மகிழ்ச்சியாக உள்ளனர் என கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசினேன். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிற விவகாரங்கள் பற்றியும் பேசினேன் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்றால், எங்களுக்கு வேறு சில வாய்ப்புகளும் உள்ளன என்றார்.
எல்லை மோதலில் 50 பாகிஸ்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் 19 நிலைகளை பாகிஸ்தான் கைப்பற்றி உள்ளது.
இந்த சூழலில், முத்தகியின் இந்திய பயணம் முக்கியம் பெற்றுள்ளது. இந்தியாவுடனான எங்களுடைய வர்த்தகம் 100 கோடி அமெரிக்க டாலரை (ரூ.8,865 கோடி) மிஞ்சியுள்ளது என்றும் அவர் கூறினார்.