நெல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. நகர், புறநகர் பகுதிகளில் மட்டுமல்லாது, மலைப்பகுதிகளிலும் தொடரும் மழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்த வண்ணம் இருப்பதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1,847 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியை கடந்து நீர்வரத்து இருக்கிறது.
இதனால் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து பாபநாசம் அணை 101.80 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 4 அடி உயர்ந்து 115.48 அடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்த நிலையில், தொடர்மழையால் இன்று 2 மடங்கு உயர்ந்து 1598 கனடியாக உயர்ந்துள்ளது. இன்று மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 99 அடியை நெருங்கி உள்ளது.
களக்காடு, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. ராதாபுரம் சுற்றுவட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
அங்கு அதிகபட்சமாக 32 மில்லிமீட்டரும், களக்காட்டில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 9 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
கனமழை பெய்து வருவதால் திருக்குறுங்குடி நம்பி கோவில், களக்காடு தலையணை செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
மேலும் மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் கடந்த 1 வாரமாக கனமழை பொழிந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து எஸ்டேட்டில் 14 ½சென்டிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 13 ½ சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சியில் 10.8 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 8.6 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.