மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 231 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்து கேப்டன் ஷோபி டிவைன் அதிகபட்சமாக 85 ரன்கள் அடித்தார். ப்ரூக் ஹாலிடே 45 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நோன்குலுலேகோ எம்லாபா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வால்வார்த் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து தஸ்மின் பிரிட்ஸ் உடன் சுனே லுஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரிட்ஸ் 89 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மரிசானே காப் (14) அன்னேகே போஸ்ச் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும், சுனே லுஸ் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 40.5 ஓவரில் 234 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.