சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட கால்வாய்களில் நீர்மட்டம், ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்து வாரத்தில் உள்ள நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு 1913 தொலைபேசி மூலமாக வந்த புகார்கள், சமூக வலைதளங்கள் மூலமாக பெறப்பட்ட புகார்களின் விவரங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து புகார்தாரர்கள் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துக்கொள்ளப்பட்ட காலநேரம், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து புகார்தாரர் தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை கணினியில் பார்வையிட்டு, சமூக வலைதள புகார்களை கையாளும் பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.
மழை அதிகளவில் பெய்கிறதா, வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் ஆராய்ந்தார்.
அதேபோல் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்தும், பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.