‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார் – நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி!!

நர்மதா:
‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகர் அருகே உள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து படேல் சிலை முன்பாக முதன்முறையாக நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பில் துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல் படைகள் உட்பட அனைத்துப் படைகளுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ” வரலாற்றை எழுதும் நேரத்தை வீணாக்கக்கூடாது, ஆனால் வரலாற்றை உருவாக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை சர்தார் படேல் சாத்தியமாக்கினார். ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற யோசனை படேலுக்கு மிக முக்கியமானது.

சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் நேரு அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தடுத்தார்.

இதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, தனி அரசியலமைப்பு மற்றும் தனி கொடி வழங்கப்பட்டது. காங்கிரஸின் இந்த தவறு காரணமாக நம் நாடு பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டது.

எனது மிகப்பெரிய மகிழ்ச்சி தேசத்திற்கு சேவை செய்வதில் இருந்து வருகிறது என்று சர்தார் படேல் ஒருமுறை குறிப்பிட்டார்.

தேச சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதை விட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என்பதை நம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்

இந்த அணிவகுப்பில் 900 கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இந்திய கலாச்சாரத்தின் செழுமை மற்றும் பன்முகத்தன்மையைக் குறிக்கும் பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில், ஜார்க்கண்டில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் துணிச்சலான நடவடிக்கையை வெளிப்படுத்திய சிஆர்பிஎஃப்-ன் 5 சௌரிய சக்ரா விருது பெற்றவர்களும், பிஎஸ்எப்-ன் 16 வீரதீரப் பதக்கங்களை வென்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *