தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்!!

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நேற்று மாலை நேரில் சந்தித்தார். இருவரும், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாமக உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது, பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி (ராமதாஸ் மகள்), நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஈஸ்வரன் கூறும்போது, “வெளியூர் சென்றிருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க முடியவில்லை.

இதனால், அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளோம். பூரணமாக குணமடைந்து, உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பாமக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாஸிடம் தெரிவித்துள்ளோம். பாமக தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.

திமுக கூட்டணிக்கு பாமக வருவது குறித்து திமுக தலைவர் மற்றும் பாமக நிறுவனர் பேசக்கூடிய கருத்து. திமுக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம். கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில்தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறும்.

பிஹாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால், தமிழகத்தில் நடைபெறும்போது தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுதான், எங்களது நிலைப்பாடு. திருத்தப் பணி நடைபெறும்போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

திமுகவுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நேரில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *