கரூர்,
கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கடந்த 16-ந்தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் கடந்த 19-ந் தேதி தீபாவளி விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே சி.பி.ஐ. தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இன்ஸ்பெக்டர் மனோகரன், சி.பி.ஐ. அதிகாரிகளின் வசதிக்காக மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சென்றிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்று கரூருக்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் 2-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், இன்று கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.3டி லேசர் ஸ்கேனர் கருவியுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.
வேலுச்சாமிபுரம் பொதுமக்கள் வணிகர்களிடம் சாட்சியங்கள் பெற சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து4 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.