”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்” – விஜய் கூற உறுதிமொழியேற்ற தவெக நிர்வாகிகள்….

தமிழக வெற்றிக் கழகம் கொடி அறிமுக நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்’ என உறுதிமொழியேற்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை 9.25 மணிக்கு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார்.

இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. கொடியை அறிமுகம் செய்த பின்னர் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், கட்சிக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து கட்சியின் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டரணி, மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணி தலைவர்கள் என 300 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக கொடி அறிமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். விஜய் உறுதிமொழியை கூற நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். அதாவது, “நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் மக்களாட்சி, நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றன்.” என்று உறுதிமொழியேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *