நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா காளிபாளையம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
பின்னர் விநாயகர் வழிபாடு, மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம், பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் கும்பங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீர்த்த குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர்.
மாலையில் முளைப்பாரி அழைத்தல் மற்றும் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் நடைபெற்றது. முதற்கால யாக வேள்வி, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 4.30 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கி விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம், சுவாமிக்கு காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சி களைத் தொடர்ந்து, இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடந்து நாடி சந்தானம், யாத்திரா தானம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து யாகசாலைகளில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோபுரத்தை அடைந்ததும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் மகாஅபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தசதானம், தசதரிசனம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.