உலகக் கோப்பையை வென்று வாருங்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

மும்பை,
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இதில், மும்பையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா (10 ரன்), ஸ்மிர்தி மந்தனா (24 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

3-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்ரேட்டை 6-க்கு குறையாமல் நகர்த்தினர்.

வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அட்டகாசமாக ஆடிய ஜெமிமா அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.

இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

என்ன ஒரு அற்புதமான வெற்றி! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் ஒருமுறை நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளது!


அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127)* மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (89) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள்.

இந்த சாம்பியன்களின் உற்சாகம், மன உறுதி மற்றும் உறுதிப்பாடு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. உலகக் கோப்பையை வென்று வாருங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *