பாட்னா:
பிஹாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. கடுமையான தேர்தல் பணிகளுக்கு இடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெகுசராய் என்ற இடத்தில் உள்ளூர் மக்களுடன் இணைந்து குளத்தில் இறங்கி மீன்டிபிடித்து மகிழ்ந்தார்.
படகு மூலமாக குளத்துக்குள் சென்ற ராகுல் தண்ணீரில் குதித்து நீச்சல் அடித்தார். அப்போது விகாஸ்ஷீல் கட்சியின் (விஐபி) நிறுவனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்தார்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: மீனவர்கள், பிஹார் பொருளாதாத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.
அவர்களுக்கு என்றுமே எனது ஆதரவு உள்ளது. பிஹாரின் பெகுசராயில் உள்ள மீனவர் சமூகத்தினரை விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சாஹ்னியுடன் இணைந்து சந்தித்ததில் மகிழ்ச்சி.
மீனவர்களின் பணி போராட்டம் மற்றும் பிரச்சினைகள் நிறைந்தவை. இருப்பினும், அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வணிகத்தைப் பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் ஊக்கமளிக்கிறது.
பிஹாரின் ஆறு, குளம், கால்வாய் மற்றும் அவற்றின் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பகுதி. அவர்களின் உரிமை, மரியாதைக்காக ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் சேர்ந்து நிற்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.