‘தர்மேந்திரா நலமுடன் உள்ளார்’ – ஹேமமாலினி!

சென்னை:
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மறைந்துவிட்டதாக முன்னணி செய்தி ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்ட நிலையில், அதனை மறுத்துள்ள அவரது மனைவியும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கப் பதிவில், “இங்கே நடப்பவை மன்னிக்க முடியாதது. பொறுப்புள்ள ஊடகங்கள் எப்படி இத்தகைய தவறான செய்திகளை வெளியிட முடியும். ஒருவர் சிகிச்சைக்கு நல்லமுறையில் ஒத்துழைத்து, உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுவரும் போது இப்படியான செய்திகளை வெளியிடுவதா?.

இது அவமதிப்பு மட்டுமல்ல; பொறுப்பின்மையும் கூட. தயைகூர்ந்து எங்கள் குடும்பத்துக்கு உரிய மரியாதையும், இப்போதைக்கு தனிமையையும் கொடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தர்மேந்திரா – ஹேமமாலினி தம்பதியின் மகள் இஷா தியோலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் ஊடகங்களை விளாசியுள்ளார். இஷா, “ஊடகங்கள் பரபரப்பில் உள்ளன.

அதனால், தவறான செய்திகளைப் பரப்புகின்றன. எனது தந்தை நலமுடன் உள்ளார். வேகமாக உடல்நிலை தேறி வருகிறது. அவரது நலனுக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி. தயவுசெய்து எங்கள் குடும்பத்துக்கு கொஞ்சம் தனிமையைக் கொடுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

90 வயதான நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட்டின் பிரபல நடிகராக உலா வந்தவர், சிறிது காலம் அரசியலிலும் ஈடுபட்டார்.

பாஜக எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் மறைந்துவிட்டதாக ஊடகங்களில் தகவல் பரவ அதற்கு ஹேமமாலினி, இஷா தியோல் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *