புதுடெல்லி:
11-வது மகளிர் ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் 2 சிறந்த அணிகள் என மொத்தம் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது ஆட்டத்தில் நமிபியாவையும் (டிச.1), 2-வது ஆட்டத்தில் ஜெர்மனியையும் (டிச.3), 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தையும் (டிச.5) சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஜூனியர் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் கேப்டனாக நீடிக்கிறார். மாற்று வீராங்கனைகளாக பிரியங்கா யாதவ், பார்வதி டாப்னோ இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: நிதி, ஹர்ஷா ராணி மின்ஸ், பின்களம்: மனிஷா, லால்தான்லுஅலங்கி, சாக்ஷி சுக்லா, பூஜா சாஹூ, நந்தினி, நடுகளம்: சாக்ஷி ராணா, இஷிகா, சுனெலிதா தோப்போ, ஜோதி சிங், கைடிம் ஷிலீமா சானு, பினிமா தான், முன்களம்: சோனம், பூர்ணிமா யாதவ், கனிகா சிவாச், ஹினா பானோ, சுக்வீர் கவுர்.