சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் பெருமையாக அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து வருகின்றன.
தென் கொரிய நிறுவனம் ஹுவாசுயங் (Hwaseung)ரூ. 1720 கோடி முதலீட்டில், 20,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பெரிய அளவிலான தோலற்ற காலணிகள் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் அறிவித்தார்.
மூன்று மாதங்களுக்குள், இந்த முதலீட்டை ஆந்திரப்பிரதேசத்துக்கு மாற்ற ஹுவாசுயங் (Hwaseung) தீர்மானித்துள்ளது.
பிற மாநிலங்கள் உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க வேகமாக செயல்படும் நேரத்தில், அலட்சியம் மற்றும் நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழ்நாடு தனது நிலையை இழந்து வருகிறது.
ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.