சென்னை:
சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: மதுப் பழக்கத்தை ஒழித்தால்தான் சமுதாயமும், நாடும் முன்னேறும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும்.
ஏழைக்கு ஒரு கல்வி, நடுத்தர மக்களுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்பதுபோல கல்வியின் நிலைமை உள்ளது.வன்னியர்களுக்கு மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைத்து சாதிகளுக்காகவும் போராடி வருகிறது பாமக.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக யாருடன் கூட்டணி என விரைவில் முடிவெடுக்கப்படும்.
அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். தேர்தலுக்காக பெண்கள் 500, 1000 ரூபாய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதியாக இருக்க வேண்டும். பெண்கள் உறுதியாக இருந்தால் நல்லாட்சி அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.