சென்னை,
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இந்தியா கூட்டணியால் வெறும் 35 தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் களம் கண்டு 85 இடங்களில் வெற்றிக்கனியை பறித்துள்ளது.
கடந்த முறை (2020) போலவே இந்த முறையும் நிதிஷ்குமாரே முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார். அதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், மீண்டும் வரும் 20-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தியது மத்திய மந்திரி அமித்ஷா என்றே சொல்லவேண்டும். அந்தக் கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சிகளாக இருந்தாலும், லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதில், ஒரு சில கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாருக்கு இணக்கமான சூழல் இல்லாதபோதும், அவர்களுடன் பா.ஜ.க. பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிக்கு கொண்டுவந்தது.
அதனால்தான் தேர்தலில் இமாலய வெற்றியும் கிடைத்தது என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் மாஸ்டர் பிளான் போட்டவர் மத்திய மந்திரி அமித்ஷாதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
பீகார் மாநில முதல்-மந்திரியாக வரும் 20-ந் தேதி நிதிஷ்குமார் பொறுப்பேற்க உள்ளார். அப்போது அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்க இருக்கிறது. அதன்பிறகு, மத்திய மந்திரி அமித்ஷாவின் பார்வை, அடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் நோக்கி திரும்பும் என்று கூறப்படுகிறது.
இங்கு ஏற்கனவே ஒன்றிணைந்த அ.தி.மு.க.வை உருவாக்க அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அதற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், ஒருங்கிணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த முறை பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.விலும் தந்தை-மகன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
எனவே, அ.தி.மு.க., பா.ம.க.வை மீண்டும் கட்டமைத்து கூட்டணியை வலுப்படுத்த பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்தப் பணிகள் விறுவிறுப்படையும் என்றும் கூறப்படுகிறது. தமிழக பாஜக நிர்வாகிகளும் பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.