புதுடெல்லி,
மும்பை -ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டப் பணிகள் தொடர்பான அனுபவங்களை ஆவணப்படுத்துமாறு, அதன் இன்ஜினியர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். புல்லட் ரெயில் திட்ட அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆமதாபாத்-மும்பை இடையே 508 கி.மீ. தூரம் கொண்ட இந்த திட்டத்தில் 465 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
இதில் 326 கி.மீ. பாலப்பணிகள் முடிவடைந்து உள்ளன. 25 ஆற்றுப்பாலங்களில் 17-ம் நிறைவடைந்து இருக்கிறது.
நாட்டின் முதலாவது புல்லட் ரெயில் சபர்மதி, ஆமதாபாத், வதோதரா, சூரத், வாபி, தானே, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக இயக்கப்படுகிறது.
சர்வதேச தரத்தில் நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும் இந்த புல்லட் ரெயில் திட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பிரதமர் மோடி சூரத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது திட்டத்தின் தற்போதைய நிலை, ரெயில் செல்ல திட்டமிடப்பட்டுள்ள வேகம், கால அட்டவணை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
புல்லட் ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் பெற்ற அனுபவங்களை ஆவணமாக பதிவு செய்யுங்கள்.
இந்த ஆவணங்களை பராமரிப்பதன் மூலம் வருங்காலத்தில்நாடு பெரிய அளவிலான புல்லட் ரெயில் திட்டங்களை செயல்படுத்து வதை நோக்கி தீர்க்கமாக நகர முடியும்.
இந்தியா மீண்டும் மீண்டும் பரிசோதனை முயற்சிகளை எடுப்பதை கைவிட வேண்டும். மாறாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட மாதிரிகளில் இருந்து கற்றதை பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும்.
அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம், அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும்.
சில நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்பட்டன என்பது பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே பிரதிபலிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையெனில், நோக்கம் அல்லது திசை இல்லாமல் பிரதிபலிப்பு நிகழக்கூடும். நாம் இங்கே நம் வாழ்க்கையை அர்ப்பணித்து, நாட்டிற்கு மதிப்புமிக்க ஒன்றை விட்டுச்செல்வோம்.
முன்னதாக புல்லட் ரெயில் திட்டத்தில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரிடம், இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டத்தில் பணியாற்றும் அனுபவம் எப்படி இருக்கிறது? என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், இது தனது கனவு திட்டம் என்றும், தனது குடும்பத்துக்கு பெருமிதம் அளிக்கும் தருணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பெங்களூருவை சேர்ந்த சுருதி என்ற மற்றொரு பெண் அதிகாரி, புல்லட் ரெயில் திட்ட செயல்படுத்தலின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது குழு நன்மை தீமைகளை மதிப்பிடு வதாக பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினார்.
மேலும் தீர்வுகளை அடையாளம் காண்பது மற்றும் குறைபாடற்ற செயல்படுத்தலை உறுதி செய்வதற்காக மாற்று வழிகளை ஆராய்வதையும் அவர் எடுத்துரைத்தார்.