வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசுவதால் தலைவர் பதவி மற்றும் அதிகாரங்கள் பறிப்பு …. நடிகர் மன்சூர் அலிகான் அதிர்ச்சி…

சென்னை;

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருந்தார். ஆரணியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த அவர் திடீரென அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திடீரென இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை வளசரவாக்கம் நேற்று இரவு நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவருக்கு  இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

 “வளசரவாக்கத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மன்சூர் அலிகான்  தேர்தல் நெருங்கும் போதெல்லாம் புதிது புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார். பிறகு காணாமல் போகிறார்.

ஆனால், நாங்கள்  தேர்தலைக் கடந்தும் இருக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள். இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் தானாகவே முடிவுகளை  எடுக்கிறார். யாரோ சொல்லும் தகவல்களை எல்லாம் வைத்து முடிவு எடுக்கிறார். நிர்வாகிகளுடன் எந்தவொரு முடிவு குறித்தும் ஆலோசிப்பதில்லை. வாய்க்கு வந்ததை ஊடகங்களில் பேசிவிட்டு செல்கிறார்.

இந்தக் காலத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் கட்சியால் தொடர்ந்து செயல்பட முடியும். இதன் காரணமாகவே அவரை கட்சியில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்தோம். இப்போதைக்குப் பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரமும் மாற்றப்பட்டுள்ளது”  என்று கண்ணதாசன் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *