கோவை:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – உத்தர பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.
பாபா இந்திரஜித் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 136.3 ஓவர்களில் 455 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பாபா இந்திரஜித் 188 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 149 ரன்கள் விளாசி கார்த்திக் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். குருசாமி அஜிதேஷ் 86, சோனது யாதவ் 44 ரன்கள் சேர்த்தனர்.
உத்தர பிரதேச அணி சார்பில் கார்த்திக் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த உத்தர பிரதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.