உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு!!

புதுடெல்லி:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புக ளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சட்டங்களின்படி, வரும் டிசம்பர் 21, 2025-க்குள் கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும்.

கேரளாவில் 941 கிராம பஞ்சாயத்துகள், 152 ஒன்றிய பஞ்சாாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் என 1,200 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மொத்தம் 23,612 வார்டுகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு கேரள மாநில தேர்தல் ஆணையம், டிச.9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 9ம் தேதியும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11ம் தேதியும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.13-ம் தேதியும், தேர்தல் முடியும் கடைசி தேதி டிச.18-ம் தேதி என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் நவ.4 முதல் டிச.4 வரை வீடு வீடாகச் சென்று சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் என இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும். அதோடு, அரசாங்கத்தின் தினசரி பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லாத நிலை உருவாகும்.

இதனால், நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும். எனவே, இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது, ஒரு லட்சத்து 76,000 அரசு பணியாளர்கள் மற்றும் 68,000 காவல்துறையினர் ஆகியோர் ஈடுபடக்கூடிய மிகப் பெரிய பணி. கூடுதலாகவும் 25,668 பணியாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குறிப்பிடத்தக்க அளவில்தான் உள்ளனர். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இவ்வளவு எண்ணிக்கையில் பணியாளர்களை அளிப்பது, மாநில நிர்வாகத்தை கடுமையாக பாதிக்கும்.

சிறப்பு தீவிர திருத்தத்தை கொள்கை அளவில் கேரள அரசு ஆதரிக்கவில்லை. எனினும், தற்போதைய சிக்கல் என்பது சிறப்பு தீவிர திருத்தத்தின் சட்டப்பூர்வ நிலை பற்றியது அல்ல. மாறாக, அது எத்தகைய காலத்தில் நடத்தப்படுகிறது என்பது தொடர்பானது.

எனவே, சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *