பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது – ஸ்டான்லி மருத்துவர் கணேஷ் அறிவுறுத்தல்!!

சென்னை:
பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவ.15-ம் தேதி முதல் நவ.21-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தலைமையில் நடந்த விழாவில், பச்சிளம் குழந்தை பராமரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் முக்கிய தகவல்களை கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களை, மருத்துவமனை டீன் அரவிந்த் வெளியிட்டார்.

இவ்விழாவில் நிகழ்வில் பங்கேற்ற மருத்துவர்கள், புதிதாகப் பிரசவித்த தாய் மார்களின் பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தினர்.

சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் கூறியதாவது: “குழந்தையை கதகதப்பான ஆடைகளினால் நன்கு போர்த்தி வைத்திருக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதை குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு 180 நாட்கள் வரை பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் சீம்பால் குறைவாக இருந்தாலும் போதுமானது.

உங்கள் குழந்தைக்கு ஒவ்வொரு முறையும் 15- 20 நிமிடங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு மேல் (பகல் மற்றும் இரவு சேர்த்து) சிறுநீர் கழித்திருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறது என்பதாகும். தாய்க்கு எல்லா வகையான உணவுகளையும் கொடுக்கலாம் (பழங்கள், காய்கறிகள், அசைவ உணவுகள்).

தாயின் உணவுக்கும், பச்சிளம் குழந்தையின் மஞ்சள் காமாலைக்கும் தொடர்பு கிடையாது. குழந்தைகளுக்கு வைட்டமின்-டி சொட்டு மருந்து ஒரு வயது வரை கட்டாயமாக கொடுக்க வேண்டும். தொப்புள் கொடி விழுந்தவுடன் குழந்தையை குளிக்க வைக்கலாம். தடுப்பூசி அட்டவணைப்படி முறையாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

வாயில் கை விட்டோ, மூக்கில் ஊதியோ சனி எடுக்கக் கூடாது. விக்ஸ் கொண்டு தலையில் மார்பில் தேய்க்க கூடாது. உரம் எடுக்கக் கூடாது. கற்பூர இலை, முசு முசு இலை, பெருங்காயம் ஆகியவற்றை கலந்து வாயில் விட்டால் சளி போய்விடும் என்று நினைத்து ஊற்றினால், புறை ஏறி நெஞ்சில் நிமோனியா சளியாக மாறி குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக மாறும். நாக்கில் வசம்பு தடவக் கூடாது.

குழந்தை மலம் கழிக்கவில்லை என்று முருங்கை குச்சி மற்றும் வெற்றிலை காம்பை ஆசன வாயில் வைப்பது தவறானது.

குழந்தை அதிகமாக அழுவதை கட்டுப்படுத்த பிளாஸ்டிக் சூப்பானை பயன்படுத்த கூடாது. குரல் நன்றாக வரும் என்று கழுத்தை பால் கொடுக்க கூடாது. வயிற்று வலியால் குழந்தை அழுகிறது என்று எண்ணி க்ரைப் வாட்டர் கொடுக்க கூடாது.

தாய்ப்பால் வரவில்லை என்று வீட்டில் பெரியவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கூறுவதை நம்பி புட்டிப் பால், பசும் பால், பவுடர் பால் ஆகியவற்றை கொடுக்க கூடாது. மருத்துவரை அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கண் மை வைக்கக்கூடாது.

குழந்தை தாய்ப்பால் சரியாக குடிக்காமல் இருப்பது, அதிகப்படியான அழுகை அல்லது சோர்வாக இருத்தல், அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, பிறந்த 24 மணி நேரத்துக்குள் மஞ்சள் காமாலை, உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் மஞ்சளாக இருப்பது, பிறந்த 48 மணி நேரத்துக்குள் மேலாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது, வாந்தி, தாய்ப்பால் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல், வயிற்றுப்போக்கு, வாயிலிருந்து நுரை வருதல்.

குழந்தை நீல நிறமாக மாறுதல், புறை ஏறுதல், மூச்சு திணறல், வலிப்பு இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்” என்று கணேஷ் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *