பாட்னா,
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீகார் முதல்வராக 10வது முறையாக இன்று பதவி ஏற்றார்.
விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களும் நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. – 89; ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை பிடித்தன.
இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ்குமார், எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ்குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 10வது முறையாக முதலமைச்சராக நிதிஷ் குமார் (வயது 74) பதவியேற்றார். கவர்னர் ஆரிப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 26 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜயகுமார் சின்ஹா ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்றனர். இவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்கிறார்கள்.
இதனையடுத்து பா.ஜ.க.வை சேர்ந்த திலீப் ஜெய்ஸ்வால், மங்கள் பாண்டே, ராம் கிருபால் யாதவ், சந்தோஷ் சுமன், நிதின் நபி, சஞ்சய் சிங் டைகர், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ராம நிஷாத், லகேந்திர குமார் ரோஷன், பிரமோத் குமார், சஞ்சய் குமார் சிங்,
தீபக் பிரகாஷ், சஞ்சய் குமார், ஸ்ரேயாசி சிங், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரோவன் குமார், அசோக் சவுத்ரி, லெஷி சிங், மதன் சாஹ்னி, சுனில் குமார், முகமது ஜமா கான் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.