சென்னை:
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மகளிர் ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடந்த நவ.11-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த வாதம்:
சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், சி.அய்யப்பராஜ்: மனுதாரருக்கு மாநில மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில், புகார் கொடுத்த 2 பெண்களின் பெயர்களைத் தவிர வேறு எந்த விவரங்களும், ஆதாரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
மனுதாரர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னையில் எந்த கூட்டத்திலும் பங்கேற்று பேசாத நிலையில், சென்னையை சேர்ந்த பெண்கள் கொடுத்த புகாரின்பேரில் மகளிர் ஆணையம் உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. பெண்களுக்கு எதிராக அவர் ஒருபோதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை.
கடந்த அக்.28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய சம்மன் முந்தைய நாள்தான் கிடைத்தது. மனுதாரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட மகளிர் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது.
காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கேஎம்டி. முகிலன்: மகளிர் ஆணையம் இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
இதுதொடர்பான விவரங்களைப் பெற்று சரிபார்க்க வேண்டி இருப்பதால் உரிய அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, மகளிர் ஆணைய உத்தரவுக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
காவல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.