சென்னை ,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் , காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதம் பெய்த கன மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்ததில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அறுவடை செய்யும் நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகவும், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை தளர்வு செய்து, 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு, தமிழக அரசு சார்பில், கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் சார்பில் தமிழகத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்வதற்கு இயக்குநர்கள் நவீன், பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் கொண்ட குழுவுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட தமிழக அரசின் அதிகாரிகளும் ஆய்வில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
அக்டோபர் 25 முதல் 28ஆம் தேதி வரை செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து, ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த ஒன்றிய உணவுத் துறை அதிகாரிகள் குழு, நெல் மாதிரிகளை எடுத்துச் சென்று, இந்திய உணவு கழக ஆய்வகங்களில் சோதனை நடத்தியது.
பின், ஈரப்பத முடிவு குறித்த அறிக்கையை, இம்மாத துவக்கத்தில் மத்திய உணவுத் துறையிடம் சமர்ப்பித்தது.
இருப்பினும், நெல் கொள்முதல் ஈரப்பத கோரிக்கை தொடர்பாக, ஒன்றிய குழு எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில், நெல் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவை விரைவாக வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இம்மாதம் 18ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் நெல் ஈரப்பதம் தளர்வு கோரிக்கையை நிராகரித்து, தமிழக அரசுக்கு ஒன்றிய உணவுத் துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து பச்சைத் துரோகம் இழைத்துள்ள ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக விவசாயிகள் கோரியவாறு நெல் கொள்முதலில் ஈரப்பதம் 22 சதவீதம் என தளர்வு வழங்க வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார் .