பழநி;
பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் 23 கட்டணமில்லா சேவைகளுக்காக ரூ.117 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் பயனடைந்துள்ளதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மூலம் நாள் முழுவதும் அன்னதானம், பஞ்சாமிர்த பிரசாதம் வழங்குதல், கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்வதற்காக பேட்டரி கார்கள் வசதி உள்ளிட்ட 23 இனங்களின் கீழ் கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2021 மே 7 முதல் 2025 அக்.31 வரை கடந்த நான்கரை ஆண்டுகளில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்துக்கு ரூ.41.53 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 97.50 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.
இதேபோல், இலவசமாக முடிகாணிக்கை செலுத்துவதற்கு ரூ.21.08 கோடி செலவாகியுள்ளது. இத்திட்டத்தில் 46.86 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.
முதலுதவி சிகிச்சை மருத்துவமனைக்கு ரூ.1.53 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இங்கு 2.94 லட்சம் பக்தர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு ரூ.7.70 கோடி செலவு செய்யப்பட்டதில், 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1.87 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 5.84 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளனர்.
கைக்குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், இலவச திருமணம், காலணி பாதுகாப்பகம் உள்ளிட்ட கட்டணமில்லா சேவைகளுக்கு மொத்தமாக ரூ.117 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரத்து 913 செலவாகியுள்ளது.
இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் பயனடைந்துள்ளனர் என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.