சென்னை:
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் கோட்டையான கோபிசெட்டிபாளையத்தில் நவ.30-ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் குரல் கொடுத்து வந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை என பழனிசாமி கூறி வருகிறார்.
கட்சி ஒருங்கிணைப்பு என்பது உட்கட்சி விவகாரம். அதில் தலையிடமாட்டோம் என பாஜகவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது.
ஆனால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக ஒன்றிணைந்தால் நல்லது என சொல்லி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதி அவர் மட்டும் தான். அவரை நீக்கினால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என அதிமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக தொண்டர்களும் கருதக்கூடும்.
அதனால் செங்கோட்டையனின் கோட்டையான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் யாருக்கு பலம் என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் நவ.30-ம் தேதி அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை பழனிசாமி நடத்த திட்டமிட்டுள்ளார்.
பழனிசாமி கடந்த ஜூலை மாதம் முதல் மேற்கொண்டு வரும் ‘மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழனிசாமி மேற்கொண்டு வரும், ‘மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் இதுவரை 5 கட்டங்களாக 174 தொகுதிகளில் கலந்துகொண்டு சுமார் 11 ஆயிரம் கிமீ சுற்றுப்பயணம் செய்திருப்பதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
டிச.10-ம் தேதிநடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு சுற்றுப்பயணத்தை மீண்டும் தீவிரப்படுத்த பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.