சென்னை:
தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் தக்காளியின் விலை அதிரடியாக உயரத் தொடங்கி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 15க்கு விற்கப்பட்டது. நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகபட்சமாக ரூ.20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது இரு மடங்காக உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையில் கடந்த வாரம் 20 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது 70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ஓசூரில் கடந்த மாதம் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது 80 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
மேலும், மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் 28 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வழக்கமாக 1,000 பெட்டிகள் வரையில் தக்காளி வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக மழையின் காரணமாக வரத்து குறைந்துள்ளது.