பாட்னா:
பிஹாரில் 2,499 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இதன் பணிகளை மாநில மத அறக்கட்டளை கவுன்சில் (பிஎஸ்ஆர்டிசி) மேற்பார்வையிட்டு வருகிறது.
சனாதன தர்மத்தை வளர்க்க 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் கோயில் மற்றும் மடங்களின் தலைமை குருக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர்.
இதுகுறித்து பிஎஸ்ஆர்டிசி தலைவர் ரன்பிர் நந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் சனாதன தர்மத்தை வளர்க்கவும், பரப்பவும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க பிஎஸ்ஆர்டிசி முடிவு செய்துள்ளது.
கோயில்கள் மற்றும் மடங்களின் தலைமை குருக்கள்தான் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்படுவர். அனைத்து கோயில்கள் மற்றும் மடங்களில் சத்யநாரயண கதா மற்றும் பவுர்ணமி நாளில் பகவதி பூஜா நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்வர்.
இந்த பூஜைகளின் முக்கியத்துவம் குறித்து பக்தர்களிடம் எடுத்துரைப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்வர். இந்த பூஜைகளை மக்களும், தங்களது வீடுகளில் ஒவ்வொரு மாதமும் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
சமூகப் பணிகளையும் கோயில்கள் மற்றும் மடங்கள் மேற்கொள்ள வேண்டும். நமது பண்டிகைகள், பூஜைகள் மற்றும் அவற்றின் மதிப்புகளையும், சனாதன தர்மத்தையும் பரப்புவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.