சென்னை:
அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.25) குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும். குறிப்பாக, நவ.25 (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 26, 27-ம் தேதிகளில் தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
30-ம் தேதி திருவள்ளூரில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
23 செ.மீ. மழை கொட்டியது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செ.மீ., நாலுமுக்கில் 22 செ.மீ., காக்காச்சி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
….