கரூர்:
கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு இன்று (நவ. 24) தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியும், சிலரை போன் மூலம் அழைத்தும், நேரில் சென்றும் அக். 30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக். 31-ம் தேதி தொடங்கி வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அக். 31-ம் தேதி மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர்.
நவ. 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ. 6-ம் தேதி முதல் நவ. 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தினர்.
நவ. 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
நவ. 10 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள், நவ. 11-ம் தேதி முதல் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நவ. 14-ம் தேதி வரை 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
நவ. 15-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தும் கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த கூட்ட நெரிசலில் காயமடைந்த தாய், மகளான உஷா மற்றும் திவ்யா ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நவ. 16-ம் தேதி நாமக்கல் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷியிடம் நவ. 17-ம் தேதி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் நவ. 13-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜரான நிலையில் மீண்டும் 2-வது முறையாக 6 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் நகர செயற்பொறியாளர் கணிகை மார்த் தாள் உள்ளிட்ட 10 மின் வாரிய அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு நவ. 19-ம் தேதி ஆஜராகினர்.
கடந்த 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் இன்று (நவ. 24-ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் கரூர் சுற்றுலா மாளிகைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் 3 கார்களில் ஆஜராகினர்.
கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடு, பிரச்சார வாகன வருகையின் போது ஏற்பட்ட நெரிசல், உயிரிழப்பு சம்பவம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தவெக நிர்வாகிகள் வருகை காரணமாக தவெக நிர்வாகிகள், மகளிரணியினர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வெளியே காத்திருந்தனர்.