கோவை:
செம்மொழிப் பூங்கா திறப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
கோவையில் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் ரூ.214.25 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.
இதற்காக முதல்வர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.05 மணிக்கு கோவை வருகிறார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் தொண்டர்கள் வரவேற்கின்றனர்.
பின்னர், அங்கிருந்து காலை 11.45 மணிக்கு கார் மூலம் செம்மொழிப் பூங்கா வளாகத்துக்கு வருகிறார்.
பின்னர், மதியம் 12 மணிக்கு செம்மொழிப் பூங்காவை முதல்வர் திறந்துவைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம், மலைக்குன்று, செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பார்வையிடுகிறார்.
பின்னர், செம்மொழிப் பூங்காவில் உள்ள ஆடிட்டோரியத்தில் பள்ளி மாணவர்கள், கோவை யைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்துறை வல்லுநர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முதல்வர் கலந்துரையாடுகிறார்.
மாலையில், சின்னியம்பாளையத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரங்கில் தொழில்துறை சார்பில் நடைபெறும் ‘டி.என்.ரைஸ்’ முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.அதன் பின்னர், கோவையில் இருந்து கார் மூலமாக ஈரோடு மாவட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி கோவையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.